பிரவாகம்

Wednesday 26 August 2009

எனது கண்ணோட்டத்தில் ஒரு கல்லூரியின் இணையம்

வளர்ந்துவரும் உலகின் தொழினுட்ப உலகுடன் எமது இளம் சந்ததியினரையும் இணைக்கும் பங்களிப்பை இன்றைய இணையத்தளங்கள் செவ்வனே செய்கின்றன. எனினும் மின்னஞ்சல் சேவை மற்றும் சமூக வலைப்பின்னல் இணையத்தளங்கள் ஆதிக்கம் செலுத்திய அளவிற்கு சாதாரண துறைசார் மற்றும் ஆக்கபூர்வமான இணையங்கள் எமது இளம் சந்நதியினரை சென்றடையவில்லை.

பொதுவாகவே பாடசாலை இணையத்தளங்கள் என்பது ஒருவழி ஊடகமாகவே இன்று இலங்கையில் கவனிக்கப்ப்டுகின்றது. அதன் உள்ளடக்கம் மற்றும் நாளாந்த நிகழ்வுகளின் தரவேற்றம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனது பார்வையில் ஒரு கல்லூரி இணையம் என்பது வெறுமனே தரவுகளை மட்டும் உள்ளடக்கியிருக்காமல் அதன்பால் மாணவர், ஆசிரியர் ,பழைய மாணவர், பெற்றோர் மற்றும் சமூகம் அனைவரையும் ஈர்க்கத்தக்க ஊடகமாக இருப்பின் கல்லூரியை சுற்றி நடக்கும் விபரங்கள் மற்றும் தேவைகளை அனைவரும் அறிந்து கொள்வதும், சமூகத்தின் அரவணைப்பும் அதனை அடைவது மிகச்சுலபம். இன்றைய உலகின் பிறந்த இடம் விட்டு புலம் பெயர்ந்து வாழும் எமது சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆண்டில் ஒரு நாளேனும் தமது கல்லூரி நாட்களை நினைவுகூறாது இருக்கமாட்டார்கள். இவர்கள் தாமகவே விரும்பி தங்கள் பாடசாலைக்கு உதவிகளை செய்ய விளையும்போது இணையத்தளம் என்பது ஒரு உறவுப்பாலமாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் மிக அதிகம்.


இன்றைய பொழுதில் மிகச்சவாலான காரியம் நாளாந்த நிகழ்வுகளின் இற்றைப்படுத்தல் அல்லது தரவேற்றம் ( Daily Updates) . பொதுவாகவே இணையத்தள வடிவமைப்பாளர்கள் ஒரு மேலெழுந்த வாரியிலான இணையத்தளத்தினை அமைத்து கல்லூரி நிர்வாகத்திடம் கையளிக்கின்றனர். எனினும் நிர்வாக மற்றும் இணையத்தள வடிவமைப்பு உறுப்பினர்களின் தொழினுட்ப அறிவின் எல்லைக்கேற்ப அவர்கள் தொடர்ந்து தரவேற்றம் செய்யததக்கதான வசதியினை பெறுகின்றனர்.

எனவே, இணையத்தளத்திற்கு தரவேற்றம் செய்யத்தக்கதான ஒரு தரவுகளை நிர்வகிக்கும் மென்பொருள் (Content Management System) நிச்சயம் அவசியம்.

கட்டற்ற மென்பொருட்களில் Wordpress, Joomla என்பன மிகப்பொருந்தமான தெரிவுகளாகும்.

சாதாரணமாக ஒரு கல்லூரி இணையத்தளத்திற்கு வருகை தருபவர்களில் பலர் தேடுபொறி அல்லது பிற வலைத்தள இணைப்புகளில் இருந்தே வருகின்றனர். எனவே கல்லூரியின் வலைத்தள முகவரியினை பல்வேறு இணையததளங்களில் காட்சிப்படுத்துவது முக்கியமானது. கூகிள் மற்றும் யாகூ போண்ற தேடுபொறிகளிலும் இடம்பெறுமாறு செய்ய இணையத்தள குழு மேம்பட்ட தேடுபொறி முறைமையில்(Search Engine Optimization) கவனம் செலுத்த வேண்டும்.


இணையத்தளத்திற்கு வருபவர்களின் விபரங்களை சேகரித்து, தொடர்புபட்ட செய்திகளை மின்னஞ்சலாகவோ அல்லது வேறு தொடர்பாடல் மூலமோ தெரியப்படுத்துவதும் இன்றியமையாதது. இதற்கு ஒரு சாதாரண மின்னஞ்சல், பெயர், தொலைபேசி போண்ற விபரங்களை திரட்டும் ஒரு பக்கம் இருப்பது(Subscribe to News Letter Form) சாலச்சிறந்தது. அத்துடன் பிற மின்வலைப்பின்னல்களுடனான இணைப்புக்கள் கூட அமைக்கலாம். உதாரணமாக Facebook Connect மூலம் பயனரை பதிவு செய்வதன் மூலம் பயனரையும் அவரின் நண்பர் வட்டத்தினையும் அணுகும் வாய்ப்பு ஏற்படும்.

அத்துடன் Facebook Fan Page இல் சேருமாறும் கோரும் ஒரு இணைப்பும், Twitter இல தொடருமாறு கோரும் ஒரு இணைப்பும் மேலும் பலரை ஈர்க்கும். இங்கு முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியது, மேலே சொன்ன Facebook fan page, Twitter பக்கங்களை தொடர்ச்சியான இற்றைப்படுத்தலில் வைத்திருப்பது அவசியம்.


வாராந்த அல்லது மாதாந்த செய்தி மடலினை பிரசுரிப்பதுடன் மட்டுமல்லாது, மின்னஞ்சல் மூலமாக அனைவருக்கும் அனுப்புவதும் சிறந்தது.


பொதுவாகவே கல்லூரி இணையத்தளத்தில் மாணவர் ஆக்கங்களை நாம் காண்பது அரிதாகவே இருக்கின்றது. இணையம் என்னும் ஊடகத்தினை அவர்களின் ஆக்கங்களுக்கான களமாக மாற்றினால், மேலும் பல தரவுகளை கல்லூரி இணையம் தன்னகத்தே கொள்ள வாய்ப்புக்கள் அதிகம். உதாரணமா மாதாந்த சித்திரப்போட்டி, புகைப்படப்போட்டி, சிறுகதை மற்றும் விவரணப்பட போட்டி என்பவற்றினை சிறப்பாக நடத்தி வெற்றிபெறும் ஆக்கங்களை இணையத்தில் பிரசுரிக்க முடியும்.


இணையவழிக்-கற்றல் (e-Learning),மாதிரி வினாவிடை, கடந்த கால தேர்வு வினாப்பத்திரம் மற்றும் அதற்கான விடைகள் ,கல்லூரியின் வகுப்பறை பாட கேள்விகளும் அதற்கான பதில்களும், மற்றும் பொதுவிடயங்களுக்கான கலந்துரையாடலும் (Discussion Board) கூட இணைக்கப்படலாம்.



பழைய மாணவருக்கான உறவுப்பாலமாக கல்லூரியின் இணையத்தளத்தினை மாற்றுவதற்கு மிக அவசியமானது பழைய மாணவர் தகவல் திரட்டியும் அதன் பின்ன்னரான தொடர்பாடலும். (Old Student Database and Management System ). இதற்காக ஒரு குழு தொடர்ந்து இயங்கவேண்டும் அத்துடன் தகவல்களின் நம்பகத்தன்மையையும் மேற்பார்வை செய்யவேண்டும். பல்வேறு
நாடுகளில் உள்ளக தொடர்பாடலுக்கான தொடர்பு இலக்கம், மின்னஞ்சல் என்பவற்றினை இணையத்தளத்தில் பிரசுரிப்பதுடன் அதனை இற்றைப்படுத்தலும் அவசியம். உதாரணமாக நிர்வாக குழு மாற்றத்தின்போது இந்த விடயங்கள் கட்டாயமாக மாற்றியமைக்கப்படவேண்டும்.


இன்னும் பலவற்றை கல்லூரி இணையத்தளத்தினில் இணைக்கமுடியும் எனினும், இன்னமும் பல்வேறு நடைமுறை சிக்கல்களை இனங்கண்டு அதை எவ்வாறு நீக்க முடியும் என்பதை முயற்ச்சிக்கவேண்டியது கல்லூரி நிர்வாகமே. உதாரணமாக ஒரு முழுநேர இணையத்தள காப்பாளரை (Web Editor) நியமிப்பதுடன் அவருக்கு வேண்டிய தரவுகளை கால நேரத்திற்கு கிடைக்கும்படி செய்ய வேண்டியது நிர்வாகமே.

இன்றைய சூழலில் பல கல்லூரிகளில் ஒரு இணையத்தள காப்பாளரை நியமிப்பதற்கான நிதி ஒரு பிரச்சினை இல்லாதுவிடினும் இணையம் என்றொரு ஊடகத்திற்கான தேவையை, இன்றியமையாமையை அறியாமல் அதற்கு பங்களிப்பு செய்யாமல் இருப்பதே, பல கல்லூரி இணையங்கள் இன்னமும் இற்றைப்படுததப்படாமல் இருப்பதன் காரணம்.



மாற்றங்களுடன் பிரசுரிப்பதற்கு இத்தால் அனுமதியளிக்கப்படுகின்றது.